சென்னை: தமிழக கவர்னர் ரவியுடன் நாளை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பின்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடுத்தடுத்து ரெய்டுகளை நடத்தி வருகின்றனர். கடந்த இரு நாட்களாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றது. மேலும், நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக அதிமுக குற்றம் சாட்டி வருகிறது.

இதையொட்டி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை,  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்  சந்தித்து பேசுகிறார்.

நாளை காலை 11 மணிக்கு  இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது, நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அதற்கான ஆவணங்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பின், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்க உள்ளது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.