லக்னோ: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட 40 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் உ.பி. மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்து உள்ளார்.
கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் 2022ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பான திட்டமிடலுக்காக இந்திய தேர்தல் ஆணைய தலைமை அலுவலகமான நிர்வச்சன் சதனில் மாநில மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை ஏற்கனவே நடத்தி முடித்துள்ளதுடன், தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளன.
இதையடுத்து, தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால், அரசியல் கட்சியினர், தேர்தல் முன்னேற்பாடுகள், பிரசாரம் தொடர்பான நடவடிக்கைளை முன்னெடுக்கத் தொடங்கி உள்ளனர். இந்த 5 மாநில தேர்தலிலும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயலாற்றி வருகிறது. குறிப்பாக உ.பி.யில் யோகி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு பாடை கட்ட பிரியங்கா காந்தி உள்பட பல தலைவர்கள் களமிறங்கி உள்ளனர்
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி கூறியதாவது, நாட்டில் வெறுப்பு அரசியல் இருப்பதாகவும், அதை பெண்களால் மட்டுமே முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று கூறியவர், 2022 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பெண்கள் முழுமையாக பங்கேற்பார்கள்.
“உன்னாவோவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து யாரும் மறக்க மாட்டர்கள். ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை, லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் இது வரை எதுவும் பேசவில்லை என்று பாஜக அரசு மீது சரமாரியாக குற்றம் சாட்டியவர், அரசியலில் தன்னுடன் தோளோடு தோள் கொடுக்க பெண்கள் முன் வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
எனது இந்த அழைப்பானது, விவசாய போராட்டத்தில் உயிரிழந்த குடும்பங்களை சந்திப்பதற்காக நான் இங்கு வந்தபோது, என்னை சுற்றி வளைத்து சீதாபூரில் உள்ள பிஏசி விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பெண் போலீஸ் அதிகாரிக்கும் சேர்ந்ததுஎ என்றும், “இந்த நாடு மத அரசியலில் இருந்து வெளியே வரவேண்டும், பெண்கள் அதை தாங்களாகவே செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர், 2000 ரூபாய் எல்பிஜி சிலிண்டர் கொடுத்து பெண்களை சமாதானப்படுத்த முடியும் என்று இங்குள்ள கட்சிகள் நினைக்கின்றன. அது ஒருபோதும் நடைபெறாது என்றார்.
அடுத்த ஆண்டு உ.பி.யில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக விண்ணப்பப் படிவங்களைக் கேட்டிருக்கிறோம். தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள், நவம்பர் 15 முதல் விண்ணப்பிக்கலாம் என்றவர், வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு 40 சதவீத இடங்கள் கொடுக்க கட்சி முடிவு செய்துள்ளதாகவும், மொத்தமுள்ள 400 தொகுதிகளில் 40 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.
உபி. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் ஒருபுறமும், சமாஜ்வாதி கட்சி மற்றொரு புறமும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றொருபுறமும் தயாராகி வருகிறது. தற்போதைய நிலையில், 4 பிரதான கட்சிகளும் தனித்து போட்டி யிடும் நிலையில் உள்ளது. கூட்டணியைப் பொறுத்தே மாநிலத்தின் கட்சிகளின் வெற்றி நிலவரம் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, சில கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரவும் வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் முக்கிய கட்சிகள் தனித்து போட்டியிட்டால், அது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும்.
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்ற நிலையில், இம்முறை காங்கிரஸ் கட்சியை பெருவாரியான இடங்களை கைப்பற்ற காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.