சென்னை: மெரினா கடற்கரையில் நடைபெறும் கருணாநிதி நினைவிடப் பணிகளில் காலதாமதம் செய்யக் கூடாது, துரிதமாக மேற்கொள்ள வேண்டும் vd அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பொதுப்பணித் துறையின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது, நிலுவை யில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்த வேண்டியது தொடர்பாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தனது துறை தலைமைப் பொறியாளர்களுடன் தலைமைச் செயலகத்தில்  ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் முதன்மை தலைமைப் பொறியாளர் விஸ்வநாத், தலைமைப் பொறியாளர் ராமச்சந்திரன், தலைமை கட்டிட கலைஞர் மைக்கேல், துணை தலைமைப் பொறியாளர் இளஞ்செழியன், கண்காணிப்புப் பொறியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.

செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்த விவரங்களை அமைச்சரிடம் தலைமைப் பொறியாளர்கள் எடுத்துரைத்தனர். இந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களில் ஆணை பிறப்பிக்கப்பட்டவை, ஆணை பிறப்பிக்கப்பட வேண்டியது குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். இத்திட்டங்களுக்கான ஆணைகளை பிறப்பித்து பொதுமக்கள் பயன்படுத்தத்தக்க வகையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம், சென்னை மெரினா கடற்கரையில் நடந்துவரும் கருணாநிதி நினைவிடப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இதில் காலதாமதம் இருக்கக் கூடாது என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.