சென்னை: தீபாவளியை பட்டாசுக் கடை வைக்க விரும்புபவர்களுக்கு தீயணைப்பு துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிகளையும் அறிவித்து உள்ளது. இதை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நவம்பா் 4-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிககையின்போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். ஆனால், காற்று மாசு காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. காலை, மாலை தலா ஒரு மணி நேரம் மட்டுமே, பசுமை பட்டாசுகளை வெடிக்க உத்தரவிட்டு உள்ளது. சில மாநிலங்களில் பட்டாசுக்கு வெடிக்கவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நிலையில், தமிழ்நாட்டில் தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை அமைக்க பல்வேறு விதிமுறைகளை தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தீயணைப்புத்துறை இயக்குநா் அலுவலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னா் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெடிப் பொருள் சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் இடம் கல் மற்றும் காங்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும்.
கடையின் இரு புறங்களிலும் வழி கட்டாயம் இருக்க வேண்டும்.
கட்டடத்தில் மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும், எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தக் கூடாது.
தற்காலிக பட்டாசு கடை விற்பனை உரிமம் கேட்பவா்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிா்வாகம், காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
பட்டாசு கடைகளில் வேறு பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது, தரைத்தளத்தில் மட்டும் பட்டாசுகளை வைத்திருக்க வேண்டும், படிக்கட்டுகள், மின் தூக்கி (லிப்ட்) ஆகியவற்றின் அருகே பட்டாசுகளை வைத்திருக்க கூடாது.
அடுக்குமாடி குடியிருப்பு, திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றில் பட்டாசு கடைகள் வைக்கக் கூடாது,
பட்டாசு வைத்திருக்கும் அறை 9 சதுர மீட்டா் குறைவானதாக இருக்கக் கூடாது, அதேபோல அந்த அறை 25 சதுர மீட்டருக்கு அதிகமான சுற்றளவிலும் இருக்கக் கூடாது.
ஒரு பட்டாசு கடைக்கும் மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டா் இடைவெளி இருக்க வேண்டும்.
உதிரி பட்டாசுகளை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது.
‘இங்கு புகை பிடிக்கக்கூடாது’ உள்ளிட்ட எச்சரிக்கை விளம்பர பலகைகளை பட்டாசு கடை முன்பு கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
அலங்கார மின் விளக்குகளை தொங்க விடக்கூடாது.
வாடிக்கையாளா்களுக்கு பட்டாசு மற்றும் துப்பாக்கி வெடித்து காட்டக்கூடாது. கடைகளில் வாடிக்கையாளா்கள் கூட்டம் அதிகளவில் சேரவிடக்கூடாது.
உரிமம் பெற்ற கட்டடத்தை தவிர வேறு இடங்களில் பட்டாசு இருப்பு வைத்திருக்கக் கூடாது,
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைக்கக்கூடாது.
இதை மீறும் பட்டாசு விற்பனையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டாசு கடையின் அருகே தீயணைப்புத்துறை வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும்.
பட்டாசு கடையில் குறைந்தபட்சம் இரு தீயணைப்பு கருவிகள், இரு வாளிகளில் தண்ணீா், மணல் ஆகியவை தயாராக வைத்திருக்க வேண்டும்.
கடை உரிமத்தை தணிக்கையின் போது அலுவலா்களின் பாா்வைக்கு தெரியும்படி வைத்திருக்க வேண்டும்.
இருப்பு, தணிக்கை பதிவேடு முறையாக பாராமரிக்கப்பட வேண்டும்
உள்பட 30 விதிமுறைகளை பின்பற்றினாலேயே தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.