திருவனந்தபுரம்:
கேரளத்தில் கூட்டிக்கல் மலை கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட மழைவெள்ளத்தில பலர் உயிரிழந்தனர். மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள், உடைமையை இழந்தவர்கள் என மக்கள் அடைந்த துயரம் ஏராளம். ஒட்டுமொத்த கேரளத்தையும் மறுசீரமைக்க வேண்டிய அளவுக்கு சர்வ நாசத்தை ஏற்படுத்தியிருந்தது கனமழை. 2019-ல் கவளப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு மழை வெள்ளம் கேரளத்தை மிரட்டுகிறது. கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் கூட்டிக்கல் பகுதியில் நேற்றைய கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது. இதில் மூன்று வீடுகள் இழுத்துச் செல்லப்பட்டன. சுமார் 14 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காணாமல் போயிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.