டில்லி
அடுத்த வாரத்துக்குள் இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. ஆயினும் மூன்றாம் அலை கொரோனா பரவல் விரைவில் ஏற்படலாம் என்னும் அச்சுறுத்தல் உள்ளது. இதைத் தடுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தினசரி பல லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.
நேற்று டில்லியில் ஒரு விழாவில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர், “இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 97.25 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அடுத்த வாரத்துக்குள் இது 100 கோடியைக் கடக்கும்.
இந்தியா அறிவித்துள்ள 100 கோடி டோஸ் தடுப்பூசி என்னும் இலக்கை அடுத்த வாரம் எட்டி விடும். இதையொட்டி இது குறித்து துறைமுகங்கள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலயங்களில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் “ எனத் தெரிவித்துள்ளார்.