திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் துலா மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
துலா மாத பிறப்பை முன்னிட்டு துலா பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படு கிறது. அதையொட்டி, ஆகம விதிகளின்படி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி விளக்கு ஏற்றி சடங்குகளை செய்ய உள்ளார்.
அதைத்தொடர்ந்து நாளை(17-ந்தேதி) முதல் வழக்கமாக பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இதனால் நாளை அதிகாலை 5 மணியில் இருந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கோவில் நடை வருகிற 21-ந்தேதி வரை திறந்திருக்கும்.
முன்னதாக சபரிமலைக்கான புதிய மேல் சாந்தி தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதில், புதிய மேல்சாந்தி தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுகிறார்.
கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். “நெகட்டிவ்’’ சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்திக் கொண்டதற்காக சான்றிதழ் ஆகியவற்றை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
துலா மாத பூஜைகள் முடிந்தபிறகு வருகிற 21-ந்தேதி கோவில் நடை அடைக்கப்படுகிறது. அதன் பிறகு நவம்பர் 2-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டு மறுநாளே மூடப்படுகிறது.