சென்னை: நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கம் பல இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட 169 இடங்களில் போட்டியிட்டு 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது சாதனையாக கருதப்படுகிறது. இது அரசியல் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங் களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, அக்டோபர் 9-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்றுமுதல் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சியான திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக பெருந்தோல்வியை சந்தித்துள்ளது.
அதே போல தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. பாமககூட 34 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ள நிலையில் விஜய்மக்கள் இயக்கம் 77 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
திமுக, அதிமுகவை தொடர்ந்து 3வது இடத்தில் விஜய் மக்கள் இயக்கம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இது சாதனையாக கருதப்படுகிறது. அதே வேளையில், விஜய் இயக்கத்தின் வளர்ச்சி திமுக, அதிமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்பது மாவட்டங்களிலும் 169 இடங்களில் அவரது மன்றத்தினர் போட்டியிட்டனர். விஜய்யின் புகைப்படத்தினை அச்சிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தனர். விஜய் மன்றத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என பலர் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
போட்டியிட்ட 169 பதவிகளில், மாவட்ட வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 64 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமாக 77 பேர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்
. இவர்கள் அனைவரும் தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள். இந்த தகவலை தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்தியத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.