தென்காசி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொறியியல் பட்டதாரியான 21வயது இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான . ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு, 12ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பொறியியல் பட்டதாரியாக 21 வயது இளம்பெண் சாருகலா என்பவர் போட்டியிட்டார். கடுமையான போட்டிக்கு மத்தியல் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அவர் 3336 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்டார். வாக்கு எண்ணிக்கையில் மூன்று வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.