டெல்லி: 2022ம் ஆண்டு  ஹஜ் பயண நடைமுறைகள் 100% டிஜிட்டல் மயமாக நடைபெறும் என மத்தியஅமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி  அறிவித்துள்ளார்.

மும்பை ஹஜ் ஹவுசில், ஹஜ் பயணத்துக்கான ஆன்லைன் முன்பதிவு வசதி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்வை தொடங்கி வைத்து பேசிய மத்திய சிறுபான்மை விவகாரத்துறைஅமைச்சர்  முக்தார் அப்பாஸ் நக்வி, உலகம் முழுவதும் கொரோனா பரவல்  காரணமாக 2019ஆம் ஆண்டு முதல், நடப்பாண்டு வரை  ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்கவில்லை.

அடுத்த ஆண்டு (2022ஆம் ஆண்டு)  ஹஜ் பயணம் குறித்து ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்புகள் வெளியிடப்படும். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற உள்ள ஆய்வு கூட்டத்தில் சிறுபான்மை விவகாரத் துறை அதிகாரிகள், வெளியுறவு துறை, சுகாதாரம், விமானப் போக்குவரத்து அதிகாரிகள், சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர், ஜெட்டாவில் உள்ள இந்தியாவுக்கான கவுன்சில் ஜெனரல் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்.

மேலும், அடுத்த ஆண்டு (2022) முதல் ஹஜ் பயண நடைமுறைகள் 100 சதவிகிதம் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும்,  2021இல் 700 பெண்கள் மெஹ்ராம் (ஆண் துணை) இன்றி பயணம் செய்ய விண்ணப்பித்து இருந்தனர். அதற்கு முந்தைய ஆண்டில் 2,100 பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அடுத்த ஆண்டு பயணம் செய்யலாம். அடுத்த ஆண்டு மற்ற பெண்களும் மெஹ்ராம் இன்றி செல்ல விண்ணப்பிக்கலாம்” என்று கூறினார்.