சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 90% இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் முன்னிலை வகித்து வருகின்றனர். அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. 74.37 சதவீத வாக்குகளும், 2 ஆம் கட்டத் தேர்தலில், 78.47 சதவிகித வாக்குகளும் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் 2,981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8மணிக்கு தொடங்கியது. இதற்காக 9 மாவட்டங்களில் 74 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு குறைவான வாக்குகள் என்பதால் இந்த பதவிகளுக்கான முன்னணி விவரங்கள் வெளியாகி உள்ளது.
மதியம் 1மணி நிலவரப்படி 140 உறுப்பினர்களுக்கான பதவிகளில் திமுக 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றும் சூழல் உள்ளது. அதுபோல, 1380 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட திமுக கூட்டணிணியினல் 173 இடங்களில் முன்னணியில் உள்ளனர். அதிமுக வெறும் 12 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளனர். ஏறக்குறைய 90 சதவிகித இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே கைப்பற்றும் சூழல் உள்ளது. அதிமுக மண்ணை கவ்வும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இன்று மாலைக்குள் வெற்றி தோல்வி குறித்த முழு விவரம் வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி 20-ம் தேதி நடைபெற உள்ளது.