சென்னை: மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான சுப்பையா சிவஞானம், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரையின்படி, 5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனத்துக்கும், சில மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாற்றத்திற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியிருந்தார். அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையாக சிவஞானம் கொல்கத்தாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சுப்பையா சிவஞானம், 2009-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார், பின்னர் , 2011ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றதுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை மூடல், சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தடை. தனியார் பள்ளி பேருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்து தாம்பரத்தில் மாணவி சுருதி இறந்த சம்பவம் போன்ற பல்வேறு வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடத்தில் சிவஞானத்தின் பணியிட மாற்றத்திற்கு பிறகு 55 நீதிபதிகள் மட்டுமே இருப்பார்கள். இதன்மூலம் காலிப்பணியிடம் 20 ஆக உயர்கிறது.
நீதிபதிகள் இடமாற்றம் – 5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்!