மும்பை

ரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டும் பாலிவுட் நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 நாடெங்கும் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.   ஆயினும் 3 ஆம் அலை  விரைவில் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  எனவே கொரோனா தடுப்பூசி  போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  நாட்டில் பலரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  அவர்களில் ஒருவரான பாலிவுட் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

”ஏற்கனவே  நான் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன். ஆயினும் எனக்கு தற்போது கொரோனா அறிகுறிகள் இருப்பதால் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது தொடர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தேன்.  மீண்டும் தற்போது கொரோனா அறிகுறி வந்துள்ளதால் மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். 

என்னுடன் கடந்த 10 நாட்களில் தொடர்பில் இருந்த அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம்”

எனப் பதிந்துள்ளார்.