திருவள்ளூர்

னமழையால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையின் மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரியாகும்.   கடந்த 3 நாள்களாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் விடாமல் மழை பெய்து வந்தது.  இதையொட்டி பூண்டி ஏரி நிரம்பத் தொடங்கியது.  ஏரிகளுக்கான கால்வாய்களில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

இந்த ஏரி 35 அடி கொள்ளளவு கொண்டதாகும். இதில் 3231 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்க முடியும். கன மழையால் பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையிலிருந்தும், வரத்துக் கால்வாய் மூலம் 5 ஆயிரம் கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டே இருக்கிறது.

இதையொட்டி பூண்டி ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வந்தது.   இதனால் மொத்தம் 35 அடி உயரம் கொண்ட பூண்டி நீர்த்தேக்கத்தில், தற்போதைய நீர் மட்டம் 34 புள்ளி 2 அடியாக உயர்ந்துள்ளது.

ஏரிக்கு விநாடிக்கு 900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இரு மதகுகள் வழியாக ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  எனவே திருவள்ளூர் ஆட்சியர், ஆல்பி ஜான் வர்கீஸ், நிகழ்விடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.