டில்லி
கொரோனா தடுப்பூசிக்கான சிரிஞ்சுகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு 3 மாத தடை விதித்துள்ளது.
நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி அனைத்து வகையான சிரிஞ்சுகள் மற்றும் ஊசியுடன் கூடிய சிரிஞ்சுகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது இதற்கு சிரிஞ்சு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவ்த்தனர். எனவே மத்திய சுகாதாரத்துறையின் பரிந்துரைப்படி இதில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொரோனா தடுப்பூசி போடத் தேவைப்படும் 0.5 எம் எல், 1 எம் எல் (ஆட்டோ டிஸ்போசபில்) சிரிஞ்சுகள், 0.5 எம் எல், 1 எம் எல், 2 எம் எல், 3 எம் எல் டிஸ்போசபில் சிரிஞ்சுகள், மறுமுறை பயன்படுத்துவதைத் தடுக்கும் சிரிஞ்சுகள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு 3 மாதம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா தடுப்பூசிக்குத் தேவைப்படாத 0.3 எம் எல், 5 எம் எல், பெரிய அளவிலான 10 எம்எல், 20 எம் எல், 50எம் எல், இன்சுலின் சிரிஞ்சுகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் எந்தத் தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் இந்தியப் பொருட்களை வாங்கக் காத்திருக்கும் வர்த்தகர்களுக்கு நிம்மதியாகவும், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளது என இந்திய சிரிஞ்சு ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.