சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான 2 கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ளது. இதுவரை 31,662 பேர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். 72 கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதற்கிடையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இதையடுத்து செப்டம்பர் 14-ம் தேதி தரவரிசைப்பட்டியலும், தொடர்ந்து கலந்தாய்வு தேதியும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 17ந்தேதி முதல் 24-ம் தேதி வரையு நடைபெற்றது. பின்னர் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 27 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 17-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, துணை கலந்தாய்வு அக்டோபர் 19-ம் தேதியும், எஸ்சி, எஸ்டி பிரிவு கலந்தாய்வு அக்டோபர் 24-ம் தேதியும் நடைபெற உள்ளது. அக்டோபர் 25-ம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.
பொதுப்பிரிவினருக்கான 2 கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது. 2வது கட்டப் பொறியியல் கலந்தாய்வு கடந்த 5 ஆம் தேதி தொடங்கி 8ந்தேதியுடன் முடிவடைந்தள்ளது. இதில் 20,438 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற முதற்கட்ட கலந்தாய்வு மற்றும் 2ம் கட்ட கலந்தாய்வு முடிவில் மொத்தமாக 31,662 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறப்புப்பிரிவினருக்கு என 6,000க்கும் அதிகமான இடங்கள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் , மாணவர் சேர்க்கை குறையவாகவே உள்ளது.
விரைவில் 3-ம் கட்ட கலந்தாய்வு, 4-ம் கட்ட கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மாணாக்கர்களிடையே பொறியியல் படிப்புக்கு ஆர்வம் இல்லை என்பது தற்போது நடைபெற்று வரும் கலந்தாய்வு மூலம் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவலுடன், 131 கல்லூரிகளில் 1 சதவீதத் திற்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்றுதும் தெரிய வந்துள்ளது.
பொறியியல் படிப்பு மீதான மாணவர் சேர்க்கை குறைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.