டெல்லி : லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக யோகி தலைமையிலான  உ.பி. மாநில பாஜக அரசு எடுத்த நடவடிக்கை திருப்தியாக இல்லை என்று கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லையே ஏன்? என்று கேள்வி விடுத்தனர்.

கடந்த 3ந்தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றியதில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த தாக கூறப்பட்டது.  அதன்பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ரா மகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த வன்முறை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து (சூமோட்டோ)  வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது.

நேற்று மாநில அரசு, வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்டது. இன்று நடைபெற்ற வது நாள் விசாரணையின்போது,   உத்தரப் பிரதேச அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சால்வே, “குற்றஞ்சாட்டப்பட்டவர் அக்.9ஆம் தேதி மதியம் 11 மணிக்குள் ஆஜராக அழைப்பாணை அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள்,  லக்கிம்பூர் வன்முறையில் உ.பி.அரசு எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்தனர், “வழக்கின் தீவிரம் அறிந்துதான் பேசுகிறீர்களா? விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. இது ஒரு கொலைக் குற்றம். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசு எடுத்த உறுதியான நடவடிக்கை என்ன?

பொறுப்பான அரசு, போலீஸாரை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டு தீவிரமானது, சிலருக்கு குண்டுகாயம் ஏற்பட்டுள்ளது. இதுவே சாதாரண நபர் என்றால் இவ்வாறுதான் கால அவகாசம் அளிப்பீர்களா? குற்றவாளிகளை கைது செய்யாமல், கெஞ்சுவது ஏன்?

உ.பி. அரசு உங்களிடம் என்ன செய்தியை சொல்லி அனுப்பியுள்ளார்கள் என்று வழக்கறிஞரைப் பார்த்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சாதாரண சூழலில் போலீஸார் உடனடியாகச் செல்லமாட்டார்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்யவும் மாட்டார்கள். இந்த விவகாரத்தில் யார் சம்பந்தப்பட்டாலும் நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டம் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், இந்த வன்முறை தொடர்பான எந்தவொரு  ஆதாரங்களும், ஆவணங்களும் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள். இ

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஐபிசி 302 பிரிவில் கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யாமல் இருக்கிறீர்கள்.  இவ்வாறு  மெத்தனமாக சென்றால் மத்திய புலனாய்வு விசாரணை (சிபிஐ)யும் பலன் அளிக்காது என்று கூறியதுடன், வழக்கை 20ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.