சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின்கீழ் உள்ள இந்து கோவில்களில் உள்ள நகைகளை, மாநில அரசு உருக்கப்போவதாக அறிவித்து உள்ளது. அதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து இந்து கோவில்களில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. வழிபாடுகளில் தலையிட்டு மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், கொரோனாவை காரணம் காட்டி, கோவில்களை திறக்கவும் அனுமதி மறுத்து வருகிறது. இது மக்களிடையே கடும் அதிருப்திகளை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அது தொடர்பாக சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து, தமிழகஅரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்து சமய அறநிலைய சட்டத்தில், கோவிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை. அறநிலையத் துறை, கோவில் நிர்வாகத்தில் மட்டும் தலையிட முடியுமே தவிர மத வழிபாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது. வருவாய் ஈட்டுவதற்காக நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பதில், ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டு வருவாய் ஈட்டலாம்/
கோவில் நகைகள் தொடர்பாக முறையாக எந்த பதிவேடுகளும் பராமரிக்கப்படாத நிலையில், நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்வது கேள்வியை எழுப்பியுள்ளதாகவும், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் தமிழகஅரசின் நடவடிக்கை உள்ளதால் நகைகளை உருக்குவது தொடர்பான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.