லக்னோ: லகிம்பூர் கேரி வன்முறை: விவசாயிகள் மீது காரை ஏற்றிய மத்தியஅமைச்சரின் மகன் விரைவில் கைது செய்யப்படுவார் உ.பி. காவல்துறை ஐஜி லட்சுமி சிங் தெரிவித்து உள்ளார்.
உ.பி. லகிம்பூர் கேரி பகுதியில் கடந்த 3ந்தேதி நடைபெற்ற வன்முறையில், 4 விவசாயிகள், 4 பாஜகவினர் மற்றும் பத்திரிகையாளர் ஒருவர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மத்திய அமைச்சர் அஜய்மிஸ்ராவின் மன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார்தான் விவசாயிகள் மீது மோதிவிட்டுச் சென்றது. இது தொடர்பான வீடியோவையும் வெளியாகி உள்ளது. இதையடுத்தே வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தின சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, லகிம்பூர் வன்முறை சம்பவம் காரணமாக மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருவதுடன், நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர்களை தடுத்து நிறுத்துவதற்காக தான் காவல்துறை பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர குற்றவாளிகளை கைது செய்வதற்காக பயன்படுத்தப்படவில்லை’ என்று குற்றம் சாட்டியதுடன், ‘சம்பவத்தை நேரில் பார்த்த அனைவரும் மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் அங்கு நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த உத்தரபிரதேச மாநில போலீஸ் ஐஜி லட்சுமி சிங், லகிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனை விசாரணைக்கு அழைக்க உத்தரப்பிரதேச போலீஸ் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், ஆசிஸ் மிஸ்ராவை கைது செய்ய முயற்சித்து வருவதாகவும் கூறினார்.