டெல்லி: லக்கிம்பூர் கேரி (உபி) மரணத்தில் நீதி வேண்டும் என பாஜக எம்பி வருண் காந்தி  வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே லகிம்பூர் வன்முறை வீடியோ யாருடைய மனதையும் உலுக்கும் என்று கூறியிருந்த நிலையில், இன்று நீதி வேண்டும் என யோகி தலைமையிலான மாநில பாஜக அரசுக்கு எதிராக மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் கடந்த ஞாயிறன்று விவசாயிகள் போராட்டத்தின் போது, மத்திய அமைச்சரின் மகன் சென்ற சார், விவசாயிகள் மீது மோதிவிட்டு சென்றது. இதையடுத்து வன்முறை தலைவிரித்தாடியது. இதில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.   விவசாயிகள்   மீது காரை  ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய விவசாயத் தலைவர்கள் உத்தரப் பிரதேச அரசுக்கு ஒரு வார கால அவகாசம் அளித்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

லக்கிம்பூர் கேரி சம்பவம் வெட்கக்கேடானது, திட்டமிடப்பட்ட தாக்குதல் என பாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பீரேந்தர் சிங் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், பாஜக எம்.பி வருண்காந்தியும், லக்கிம்பூர் கெரி வன்முறைக்கு நீதி வேண்டும். இந்த விவகாரத்தில், விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்திருப்பது, கிரிஸ்டல்  கிளியராக வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, அவர்கள் கைது செய்யப்பட வேண்டும், கொலையின் மூலம் எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்த முடியாது. விவசாயிகளின் அப்பாவி இரத்தத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் மற்றும் நீதி வழங்கப்பட வேண்டும்  என்று வலியுறுத்தி உள்ளார்.

யோகி தலைமையிலான  பாஜக அரசுக்கு எதிராக பாஜக தலைவர்களே போர்க்கொடி தூக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   பல பாஜகவினர், உ.பி. சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வன்முறை சம்பவம் தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது.

லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறை தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.