டில்லி

கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகக் கூறப்படும் ஆசிஷ் மிஸ்ராவின் தந்தை அமைச்சர் அஜய் மிஸ்ரா திடீர் என அமித்ஷாவைச் சந்தித்துள்ளார்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நாடெங்கும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அதில் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேசம் லகிம்பூர் கேரி பகுதியில் மத்திய இணை அமைச்சர் அஜம் மிஸ்ரா மற்றும் துணை முதல்வர் மவுரியா ஆகியோருக்கு விவசாயிகள் கருப்புக் கொடி காட்டக் கூடி இருந்தனர்.

அப்போது அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது மோதி சம்பவ இடத்தில் இருவர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.   இதையொட்டி விவசாயிகள் அந்த காரை தீ வைத்துள்ளனர்.   இதனால் வெடித்த வன்முறையில்  சுமார் 9 பேர் உயிர் இழந்தனர்.  ஆறுதல் கூறச் சென்ற அரசியல் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் நாடெங்கும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.

விவசாயிகள் மீது ஆசிஷ் மிஸ்ரா கார் மோதிய வீடியோ காட்சிகள் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.  அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என பலரும்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.  வரும் ஆண்டு உபி மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் இது பாஜகவுக்கு கடும் சங்கடத்தை உண்டாக்கி இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சர்ச்சைக்குரிய அமைச்சர் அஜய் மிஸ்ரா திடீர் எனச் சந்தித்துப் பேசி உள்ளார்.  இந்த சந்திப்பு சுமார்  ஒரு மணி நேரம் நடந்துள்ளது.  இந்த சந்திப்பில் இருவரும் எதைக் குறித்துப் பேசினார்கள் எனத் தகவல் வரவில்லை.  ஆனால் அஜய் மிஸ்ராவுக்கு நாடெங்கும் எதிர்ப்பு வலுத்து வரும் வேளையில் அவர் அமித்ஷாவைச் சந்தித்தது பல ஊகங்களை எழுப்பி உள்ளன.