மதுரை: பிரபலமான குலசை தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் கடற்கரையில் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கு குறித்து மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி. பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா அக்டோபார் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10ஆம் நாளான 15ஆம் தேதி இரவில் நடைபெறுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இந்த ஆண்டும் தசரா திருவிழா பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் திறக்கப்படக்கூடாது என்றும், அரசின் வழிகாட்டுதலின்படி கோவிலின் உள்ளே மற்ற நாட்களில் பக்தர்கள் வந்து வழிபட எந்த தடையும் இல்லை. அதேபோன்று கோவிலுக்கு வெளிப்புறம் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கடற்கரை பகுதியில் தங்குவது, கடைகள் அமைப்பதற்கும் அனுமதி இல்லை. மேலும் கடற்கரை பகுதியில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை. பக்தர்கள் கோவிலுக்கு வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த பகுதியில் தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தசரா விழாவின் கடைசி நாள் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கடற்கரையில் நடத்தக்கோரி வழக்குத்தொடரப்பட்டது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளதார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வாதங்களைத் தொடர்ந்து, இதுகுறித்தான மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மதுரை: குலசை தசராவை பொதுவெளியில் கடற்கரையில், பக்தர்கள் இல்லாமல் நடத்தக்கோரி, ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். மனுவில், “தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் தசரா திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவின்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்காக கடவுளை வேண்டி, பல்வேறு வேடங்கள் அணிந்து விரதம் இருப்பார்கள். ‘கடற்கரையில் நடத்தப்படுவதே மரபு’ ‘தசரா’ நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் கடற்கரையில் புரட்டாசி மாதம் பெளர்ணமி அன்று ‘சூரசம்ஹார நிகழ்ச்சி’ நடைபெறும்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், இந்த ஆண்டு வரும் 15ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பக்தர்களுக்கு அனுமதி இல்லாத சூழ்நிலையில், பாரம்பரியமாக நடைபெறும் குலசேகரன்பட்டின கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்துவதால், எவ்வித கொரோனா பரவலும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. அதேபோல், குலசேகரன்பட்டினம் தசரா நிகழ்ச்சியில் பொதுமக்களை அனுமதிக்காமல், கடற்கரையில் பராம்பரிய முறைப்படி சூரசம்ஹார நிகழ்ச்சியை இந்த ஆண்டு நடத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ’11 நாட்கள் திருவிழாவும் யூ-ட்யூப் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் நேரலையும் செய்யப்படும். கடற்கரைப் பகுதியில் விழா நடைபெற அனுமதி அளிக்கப்பட்டால், கடற்கரை அருகே உள்ள கிராமங்களிலிருந்து பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்பு உள்ளது. இதனால் கரோனா நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என தமிழ்நாடு அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
‘இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.