கொல்கத்தா: மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பபானிபூர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 11 மணி வரை 22 சதவிகித வாக்குகளே பதிவாகி உள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் 9 கட்டங்களாக சட்டபபேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையிலும், முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் சொற்ப வாக்கு வித்தயாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால், தோல்வியை எதிர்த்து, மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தொடர்ந்து அவர் முதல்வராக பதவி வகித்தாலும் 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால், மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பபானிபூர் எம்.எல்.ஏ.வும், வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பபபானிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று (செப்டம்பர் 30) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது.
இந்த நிலையில், இன்றுபவானிபூர் தொகுதியில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அமைதியாக வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடைசி 1 மணி நேரம், கொரோனா நோயாளிகள் வாக்குகளை செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்க உள்ளது.