ன்று (செப்டம்பர் 29ந்தேதி) உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது.  இதயத்தைப் பாதுகாக்கவும் இதயநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது.

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் இதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இந்நோயால் இறக்கின்றனர்.  இன்றைய இயந்திரமயமான உலகில் நாம் உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிடுகிறோம். இதனால் உடலானது நோய்களின் கூடரமாகிறது. இதனால் இதயநோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக இதய தினத்தையொட்டி, வாசகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த கட்டுரை தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் இதய நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, செப்டம்பர் 29 ம் தேதி, உலக இதய தினமாக, உலக இதய அமைப்பால் கொண்டாடப்படுகிறது.

உலக ஹார்ட் தினம் (இதய தினம்)  கொண்டாடும் யோசனை 15 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. உலக ஹார்ட் ஃபெடரேஷன், WHO மற்றும் யுனெஸ்கோ, அத்துடன் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு சர்வதேச சுகாதார நிறுவனங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் இணைந்து இதய தினத்தை நிர்மாணித்தன.

ஆரம்பத்தில், உலக இதய தினம் செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்டது, ஆனால் 2011 ல் இருந்து ஒரு தெளிவான தேதி செப்டம்பர் 29 அன்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்lது.

உலகம் முழுவதும் கார்டியோவாஸ்குலர் நோய்கள் என குறிப்பிடப்படும் இதயம் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் இது மும்மடங்காகி இருக்கிறது. மிகவும் இளம் வயதினர் மத்தியில் இதய நோய் பாதிப்பு அதிகரித்திருப்பது தான் மேலும் கவலைக்குறியதாக இருக்கிறது என உலக சகாதாரத அமைப்பு அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.

இதயம் பாதிப்பில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், . இன்றைய தினத்தில் இதயம் தொடர்பாக உலகம்  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், மாரடைப்பு, பக்கவாதம் அல்லது மாரடைப்பு அறிகுறிகள் மற்றும் நோயாளியின் உயிரை காப்பாற்ற “முதல் உதவி” வருவதற்கு முன்பாக எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விரிவுரைகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதய நோய் தொடர்பாக உலக நாடுகளில் பரவலாக நடத்தப்பட்ட ஆய்வுகள், தெற்காசியர்கள் மத்தியில் குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் இதய நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

45 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதய நோய் பாதிப்பு மற்றும் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள், உள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள் அதிக இடர் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதய நோய் என்றால் என்ன – ஏன் வருகிறது ?

கார்டியோவாஸ்குலர் நோய் என்பது, இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு உள்ளிட்டவற்றை பாதிக்கக் கூடிய பல்வேறு வகையான இதயம் தொடர்பான பாதிப்புகளை குறிக்க பயன்படுகிறது.

கோரோனரி ஹார்ட் டிசீஸ் (Coronary heart disease), ஆர்ஹைதைமியாஸ் (Arrhythmias) , ஆரோடிக் ஸ்டெனோசிஸ் (Aortic stenosis), மாரடைப்பு , இதய செயலிழப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும். மன அழுத்தம், மந்தமான வாழ்க்கை முறை, டிரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்வது, புகையிலை, பருமன் ஆகியவை இதற்கான முக்கியக் காரணங்களாக அமைகின்றன.

மந்தமான வாழ்க்கை முறை மற்றும் நகர வாழ்க்கையின் தன்மை உடல் சார்ந்த செயல்பாடுகளுக்கு வழியில்லாமல் செய்து விடுகின்றன. இதன் காரணமாகக் பொதுவாக ஆரோக்கியமாக இருக்கும் இளம் வயதினர் ஏதாவது ஒரு கட்டத்தில் இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நீரிழிவு நோய் மற்றொரு முக்கியக் காரணமாக அமைகிறது.

இதய நோய்க்கான அறிகுறிகள்

இதய நோய்களை பொறுத்தவரை பல வகையான இதய நோய்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால் இவை அனைத்திலும் பொதுவாக உள்ள விஷயம் என்றால் மார்பு வலி அல்லது அசெளகரியம், படபடப்பு, லேசான தலைவலி அல்லது தலைச்சுற்றல், மயக்கம், சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை.

குறிப்பாக மார்பக வலி , தாடையில் அல்லது பின்பக்கம் வலி (தோள்பட்டைகளுக்கு இடையே) காரணம் இல்லாத களைப்பு அல்லது சோர்வு, மூச்சுத்திணறல், இருமல், மயக்கம், திடீர் கால் வீக்கம் அல்லது நீர் சேர்வது ஆகியவை தென்பட்டால் உடனே மருத்துவரை நாடுவது நல்லது.

ரத்த அழுத்தம் – கவனம்

வயதான காலத்தில் ஒவ்வொருவரும் தங்களது இரத்த அழுத்தத்தை சீராக 80 மற்றும் 120க்குள் வைத்திருப்பது அவசியம். காரணமெனில், வயதாகும் போது தமணி சுவர்கள் (arterial walls) இறுகுகிறது. இது இயல்பானது அல்ல, இதனால் இதயம் அதிக அளவில் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, வயது என்னவாக இருந்தாலும் சரி,  இரத்த அழுத்தம் 140/90. மேல் அதிகரித்தால் சிகிச்சை பெறுவது அவசியம். உணவில் ஊட்டச்சத்து மிக்க பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்வதும் அவசியம்.

பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு இல்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், அது உண்மையல்ல. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இதய நோய் பாதிக்கும் அபாயம் உண்டு. ஆரோக்கியமான வாழ்க்கையில் முறை இல்லாவிட்டால் இந்த அபாயம் உண்டு.

65 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் மரணத்தில் இதய நோய் முக்கியக் காரணமாக இருக்கிறது. இப்போது பெண்களில் புற்றுநோயை விட இதய நோய் பாதிப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதுபோல இதய நோய்க்கு காரணம், உணவுமுறை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.  உணவு குறித்தும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. இதுகுறித்து தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று எந்த உணவையும் உட்கொள்ளலாம்.

குறைந்த சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பூஜ்ஜியம் டிரான்ஸ் கொழுப்பு கொண்ட உணவை உட்கொள்வது அவசியம்.  காய்கறிகள் சார்ந்த எண்ணெயில் உள்ள அன்சாச்சுரேடட் கொழுப்பு நல்லது. ஒமேகா -3 பேட்டி ஆசிட் கொண்ட மீன்களை வாரம் மூன்று முறை உட்கொள்வதுடன்  தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் ஏதேனும் ஒரு வகை உடற்பயிற்சி செய்வது, தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கொண்ட ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். இது இதய நோய் பாதிப்பு வாய்ப்பை குறைக்கும் என்று உலக இதய நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மது, புகையிலையை, சர்க்கரை, டிரான்ஸ் பேட் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது என்றும் எச்சரித்துள்ளது.

தினமும் இரவு குறைந்தது ஏழு மணி நேரம் தூங்குங்கள். இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் சர்க்கரை ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்.  ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம்.

முழுமையான ஆரோக்கிய வாழ்க்கைக்கு இதய நலன் பேணுங்கள். பெரும்பாலான இதய நோய் பாதிப்புகளை, இளம் வயதில் இருந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் தவிர்க்கலாம். வாழ்வியில் முறையில் சிறிய மாற்றங்கள் நல்ல பலன் கொடுக்கும். 

இதய நோய் தொடர்பாக ஏராளமான வதந்திகள் சமூக வலைதளங்களிலும் இணையங்களிலும் பரவி வருகின்றன. அதிக கொளுப்பு உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ளக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது, இதை சாப்பிடக்கூடாது என பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன.  ஒவ்வொருவரும், தங்களை மருத்துவ நிபுணராக எண்ணிக்கொண்டு, ஆள் ஆளுக்கு கருத்து சுதந்திரம் என்ற பெயரில், தங்களது கருத்துக்களை திணித்து வருகின்றனர். இதை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதே சாலச்சிறந்து.

ஆரோக்கியமாக வாழ்வோம்… இதயத்தை பாதுகாப்போம்…