சென்னை
சென்னையில் 1000க்கும் அதிகமான ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததால் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் சுமார் 3000 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை ஒப்பந்த அடிப்படையில் அப்போதைய தமிழக அரசு நியமனம் செய்தது. இவர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்கும் இடம் அப்போது வழங்கப்பட்டது.
தற்போது ஒரு சில மருத்துவமனைகளில் இந்த ஒப்பந்த செவிலியர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பணிக்காக நியமனம் செய்யப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் பணி அமர்த்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. ஒப்பந்த செவிலியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன்ர்.
நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி எம் எஸ் வளாகத்தில் சுமார் 1000க்கும் அதிகமான ஒப்பந்த செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
இது குறித்து செவிலியர்கள், “நாங்கள் கொரோனா பேரிடர் காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறோம். அரசு எங்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்காமல் அலைக்கழிக்கிறது. மேலும் தற்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் எங்களை பணியமர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கைகளைக் கைவிட்டு, உடனடியாக எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். முந்தைய அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், ‘கொரோனாவுக்காக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களைப்பணி நிரந்தர்ம் செய்ய வேண்டும்’ என்று டிவிட்டரில் வலியுறுத்தி இருந்தார். அதை இப்போது அவர் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் நேற்று இரவும் தொடர்ந்துள்ளது. இதையொட்டி போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டனர். உடல்நிலை சரியில்லாத 3 செவிலியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.