அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு.
கைலாயத்தில் ஒருசமயம் பார்வதிதேவி, விளையாட்டாகச் சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. தவற்றை உணர்ந்த அம்பிகை மன்னிப்பு கோரினாள். சிவன் அவளைப் பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார்.
இத்தலத்தில் தவமிருந்து வழிபட்டால், தகுந்த காலத்தில் காட்சி தந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாகச் சிவன் கூறினார். அதன்படி இங்கு வந்த அம்பாள் பஞ்சாக்னியை (ஐந்து அக்னிகள்) வளர்த்து, அதன் மத்தியில் இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவமிருந்தாள்.
காஞ்சிக்குச் சென்று தவமிருக்கும்படி சிவனின் அருள்வாக்கு கிடைக்கவே அங்குச் சென்றாள். இருப்பினும், அம்பிகை முதன் முதலாகத் தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு,”ஆதி காமாட்சி தலம்” எனப்படுகிறது.
அம்பாள் அந்தஸ்தில் ஸ்ரீசக்ரம்:
பொதுவாகக் கருவறையில் அம்பிகைதான் பிரதான தெய்வமாக(மூலவர்) வணங்கப்படுவாள். ஆனால், இக்கோயிலில் அர்த்தமேரு ஸ்ரீசக்ரமே அம்பாளாகக் கருதி வணங்கப்படுகிறது. ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் அம்பாளின் உற்சவர் சிலை இருக்கிறது. இவளுக்கே அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுகிறது.
இங்கு தவம் புரிந்த அம்பாள், சிவனின் உத்தரவிற்குப் பின்பு காஞ்சிபுரம் சென்றாள். அப்போது தவம் செய்த பஞ்சாக்னியை அணைக்காமல் சென்றதால் மாங்காடும் சுற்றுப் பிரதேசங்களும் தீயின் வெம்மையால் வறண்டன.
அப்போது, ஆதி சங்கரர் மாங்காட்டின் நிலையறிந்து அஷ்ட கந்தம் எனப்படும் 8 மூலிகைகளால் ஆன அர்த்தமேரு ஸ்ரீ சக்கரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிட்டை செய்தார். இதனால் தீயின் வெம்மை மறைந்து மக்கள் நலம் பெற்றனர் என வரலாறு கூறுகிறது.
ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது.
மூலவர்: – காமாட்சி.
தல விருட்சம்: – மாமரம்.
பழமை: – 2000-3000 வருடங்களுக்கு முன்.
புராணப் பெயர்: – சூதவனம்.
ஊர்: – மாங்காடு.
மாவட்டம்: – காஞ்சிபுரம்.
மாநிலம்: – தமிழ்நாடு