காஞ்சிபுரம்: அதிமுகவினர் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்படுவதாக அதிமுக துணைஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாள ருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலைவிட மிக முக்கியமானது ஊரக உள்ளாட்சித் தேர்தல். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ அது போல வேட்பாளர்களின் முகத்தைப் பார்க்கும் பொழுது இப்போதே வெற்றி பெற்றதுபோல் தோன்றுகிறது. திமுக நிச்சயம் தில்லுமுல்லு வேலை செய்து வெற்றி பெற முயற்சி செய்யும். அதைமீறி நாம் வெற்றி பெற வேண்டும்.
அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்றது. ஆனால், தற்போது கள்ளக்குறிச்சியில் இரண்டு அதிமுக மாவட்ட வார்டு உறுப்பினர்களின் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுபோல பல பகுதிகளில் அதிமுகவினரின் மனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டு உள்ளன. முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை நிராகரித்தது தவறு, இதுகுறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.க. ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மாறிமாறி மேடைகளில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறி வந்தனர். ஆனால், நீட் தேர்வு தற்போது நடைபெற்றுத்தான் வருகிறது. திமுகவின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் வெளியே வந்துவிடுவார்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான் ஒரே நாளில் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.