சென்னை: தமிழகம் முழுவதும் 1-8 வகுப்பு வரை விரைவில் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் தனியார் பள்ளி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலையும் கட்டுக்குள் வந்துள்ளதால், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கல்லூரிகள், மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து பள்ளிகளை முழுமையாக திறக்க அனுமதி அனுமதி அளிக்க வேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். பெற்றோர்களும் பள்ளிகளை திறக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, 1ம்வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறை அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனை நடத்தி, அதன் அறிக்கையை முதல்வரிடம் கொடுத்துள்ளார். முதல்வர் விரைவில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளி பேருந்துகள், வேன்கள் உள்பட வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. சென்னைல் எம்.ஆர்.சி. நகர் உள்பட பல பகுதிகளில் போக்குவரத்துத்துறை அலுவலர்கள், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
ஒவ்வொரு கல்வி ஆண்டு முடிவிலும் அனைத்து பள்ளி பேருந்து மற்றும் வேன் அனைத்தையும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் போக்குவரத்து காவல்துறை யினர் உள்ளிட்டோர் சோதனை செய்த பிறகு தகுதி சான்றிதழ் அளித்த பிறகே, வாகனத்தை இயக்க அனுமதிக்கப்படுகிறார்கள் . இந்த நிலையில், வருகின்ற ஒன்றாம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதால், சென்னையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பள்ளிகள் மூடப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், பள்ளிப்பேருந்துகளின் நிலை என்ன என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.