பவானிபூர்
மேற்கு வங்கத்தில் நான் முதல்வராகத் தொடர மழை பெய்தாலும் வந்து வாக்களியுங்கள் என மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருணாமுல் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். ஆனால் அவர் தேர்தலில் தோல்வி அடைந்தார். எனவே 6 மாதங்களுக்குள் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டி உள்ளது.
இந்நிலையி8ல் மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 30 ஆம் தேதி அன்று இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் ஒரு தொகுதியான பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
தனது தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தில் பவானிபூர் ஒரு மினி இந்தியா ஆகும். இங்கு பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர். இங்கு நான் 6 முறை வெற்றி பெற்றுள்ளேன். தற்போது மழைக் காலம் ஆகும். ஆயினும் நான் முதல்வராகத் தொடர மழை பெய்தாலும் நீங்கள் வீட்டை விட்டு வந்து எனக்கு வாக்களியுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.