வாணியம்பாடி
ஆட்சி அமைத்து 4 மாதங்களில் செய்துள்ள சாதனைகளால் உள்ளாட்சித் தேர்தலில் திமுக 100% வெற்றி பெறும் என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
முந்தைய ஆட்சியில் பிரிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் மாதம் நடைபெற உள்ளது. இதில் திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் திமுக பொறுப்பாளராக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று வாணியம்பாடி அருகே திமுக அலுவலகத்தில் அவர் ஆலோசனை நடத்தினர்.
அதன் பிறகு பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம், “கடந்த 4 மாத திமுக அரசின் சாதனைகளால், உள்ளாட்சித் தேர்தலில் திமுக மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலில் 100 சதவீதம் திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடிய அளவில் உள்ளது.
இந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் சுரங்கமே இல்லை. அப்படி இருந்தால்தானே ரசீது இருக்கும். ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ₹60 லட்சம் மதிப்பிலான 551 யூனிட் மணல் குவியல் சிக்கியது எப்படி?
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கே.சி.வீரமணி எப்படி இருந்தார். அவர் தற்போது எப்படி இருக்கிறார். அவருக்கு வசதி எப்படி வந்தது என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்
அதிமுக ஆட்சியில் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். அதிமுக ஆட்சியில் பணியிட மாறுதலுக்கு அமைச்சர்கள் எத்தனை லட்சம் வாங்கினார்கள்? என்ன செய்தார்கள்? என்று அரசு ஊழியர்கள் மற்றும் மக்களுக்குத் தெரியும்.
கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கினார்கள். மக்களுக்கு நல்வாழ்வே இல்லை. மந்திரிகளுக்கு மட்டுமே நல்வாழ்வு. திமுக அரசின் 4 மாதங்களில் மக்களுக்கு நல்வாழ்வு உருவாக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.