திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்திருந்தது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், செப்டம்பர் 20ந்தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உள்ளது.
இது மட்டுமின்றி, இரவு 11.30 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும், நவம்பர் மாதம் ஏழுமலையானை தரிசிப்பதற்காக 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை (செப்.,23) காலை, 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறி உள்ளது.
இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் வெளியிட்டு உள்ளது. ‘திருப்பதிக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் 2 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும். இல்லையேல் 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் இந்த புதிய கட்டுப்பாடு செப்டம்பர் 25ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்து உள்ளது.