டில்லி
அடுத்த மாதம் முதல் இந்தியாவில் பயன்படுத்தியது போக மீதமுள்ள கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது
தற்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் மருந்து நிறுவனமும், கோவாக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரிக்கின்றன.
சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனிக்கா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு ஆகும். உள்நாட்டுத் தேவை போக, உபரியாக இருக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கும் சீரம் நிறுவனம் ஏற்றுமதி செய்து வந்தது. இவற்றைப் பொருளாதாரத்தில் நலிவடைந்த 64 நாடுகளுக்கு இந்தியா அனுப்பியது.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை தொடங்கியது. மேலும் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் அதிகரித்ததால் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தியது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் கொரோனா தடுப்பு மருந்துகள் கணிசமாகத் தேவைப்படும் என்பதால் தடுப்பு மருந்து ஏற்றுமதியை ஏப்ரல் மாதத்தில் இந்தியா முற்றிலுமாக நிறுத்தியது.
தற்போது இந்தியாவில் பயன்படுத்தியது போக மீதம் இருக்கும் தடுப்பூசி மருந்தை அடுத்த மாதம் முதல் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விரைவில் நடைபெற உள்ள இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்கேற்கும் குவாட் நாடுகளின் உச்சி மாநாட்டில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக விவாதிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.