டில்லி
புதிய பஞ்சாப் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வராகப் பதவி வகித்த அமரிந்தர் சிங் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து இடையே மோதல் ஏற்பட்டது. இதையொட்டி சித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் தலைமை இருவரையும் சமாதானம் செய்து சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவ்ராக நியமித்தது.
இது அமரிந்தர் சிங் குக்கு மேலும் அதிருப்தியை அளித்தது. இந்நிலையில் அவர் தனது முதல்வர் பதவியில் இருந்து நீங்கினார். இதையொட்டி பஞ்சாப் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராகத் தேர்வு செய்துள்ளனர். அவர் தற்போது பதவி ஏற்க உள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,
”புதிய பொறுப்பை ஏற்கும் சரண்ஜித் சிங் சன்னிக்கு வாழ்த்துக்கள். நாம் பஞ்சாப் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தொடர்வோம். அவர்களது நம்பிக்கை மிகவும் முக்கியமானது”
என வாழ்த்தி உள்ளார்.