தென்காசி: தென்காசி மாவட்டத்தில், ஒரே பள்ளியைச்சேர்ந்த 50 மாணாக்கர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உண்மையை தெரிவிக்க மறுப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ந்தேதி முதல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சில பகுதிகளில் மாணாக்கர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மாறாந்தையில் இயங்கி வரும் அரசு மேல்நிலை பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 450 மாணவர்கள் பயில்வதாக கூறப்படுகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் மாணாக்கர்கள் 22 பேருக்கு நேற்று ஒரே நாளில் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வரவில்லை என்றும், மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில், சுகாதாரத் துறையினர் நேரில் சென்று மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி உள்ளனர். பரிசோதனையின் முடிவு இன்னும் வராத நிலையில்மேலும் 30 மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டடு உள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகமும், சுகாதாரத்துறையினரும் சரியான முறையில் பதில் தெரிவிக்க மறுப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
அடுத்தடுத்து மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருவதால், ஒரு வேலை கொரோனா தொற்றாக இருக்கலாம் என்ற அச்சத்தில் மற்ற மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை பெற்றோர்கள் தடுத்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. காய்ச்சல் குறித்து உண்மையா நிலவரத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.