சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி இன்று இரவு சென்னை வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய ஆளுநராக நாகாலாந்து மாநில கவர்னராக பதவியாற்றி வந்த ஆர். என் ரவியை குடியரசுத் தலைவர் தமிழக கவர்னராக நியமித்திருந்தார். அவர் இன்று இரவு சென்னை வந்தடைந்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் அவரை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு மற்றும் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் வரவேற்றனர்.
வரும் 18ந்தேதி ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் கவர்னராக பதவி ஏற்க உள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பிஹார் மாநிலத்தைச்சேர்ந்தவர். அம்மாநில தலைநகர் பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றதுடன் காவில்துறையில் ஐபிஎஸ் பட்டம்பெற்று பணியாற்றியவர். ,கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரிaக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி உள்ளது. பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். உளவுத்துறையிலும் இவர் பணியாற்றியுள்ளார். சில காலம் பத்திரிகைத் துறை பணி என இருந்தவர்.
இவர் கடந்த 2012ம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளைத் தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார். பின்னர் அவர் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றினார்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்து வந்தார். தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.