சென்னை: கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே கட்டப்பட்டு வந்த மேம்பாலப் பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. இந்த மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாத இறுதியில் திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோயம்பேடு பகுதியில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அங்கு மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த மேம்பால பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.93.5 கோடி செலவில் 1.3 கி.மீட்டர் தூரம் இரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தால், கோயம்பேடு 100 அடி சாலையில் வடபழனி – கோயம்பேடு இடையே ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மேம்பாலப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதையடுத்து மேம்பாலத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மேம்பாலத்தை திறக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இறுதிகட்ட பணிகளில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பாலம் திறக்கப்பட்டால் 100 அடிசாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைய வாய்ப்புள்ளது.