சென்னை
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராக கே சி வீரமணி பதவி வகித்து வந்தார். கடந்த 2011 முதல் 2021 வரையிலான கால கட்டத்தில் இவர வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தன. கடந்த 2011 ஆம் ஆண்டு அவருடைய சொத்து மதிப்பு ரூ.7 கோடியாக இருந்துள்ளது. தற்போது அது ரூ.90 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
இதையொட்டி அறப்போர் இயக்கம் வீரமணி மீது புகார் அளித்தது அந்த புகாரின் அடிப்படையில் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை வீரமணியின் இல்லம், வேலூர், திருப்பத்தூர், சென்னை திருவண்ணாமலையில் உள்ள அவரது உறவினர்கள் இல்லம் மற்றும் வீரமணிக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வருகிறது.
இதில் சென்னையில் 4 இடங்களிலும் திருப்பத்தூரில் 15 இடங்களிலும் சோதனை நடக்கிறது. தவிர ஓசூரில் சிப்காட்டில் உள்ள பல கோடி மதிப்புள்ள நிலத்தை ஆண்டுக்கு ரூ.1 என 99 ஆண்டுகளுக்கு வீரமணியின் நிறுவனத்துக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டது குறித்தும் சோதனை நடக்கிறது. இந்த குத்தகையை முதலில் தனது மாமனார் பெயரில் பதிவு செய்து பிறகுத் தனது பெயரில் மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.