சென்னை: தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு தினசரி 10ஆயிரத்துக்குள் மேற்பட்ட மனுக்கள் பல்வேறு கோரிக்கைகள், புகாகர்கள் குறித்து வந்துகொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் முக்கிய கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. பின்னர், முதல்வராக பதவி ஏற்றதும், அந்த மனுக்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு தனி அதிகாரியும் நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் ஆகஸ்டு 13ந்தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜ்ன், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்கள் பெறப்பட்டு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உரிய சரிபார்த்தலுக்கு பின்னர், 2,29,216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
முதல்வரின் கவனத்தை பெறும் வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான மனுக்கள் வந்து குவிந்து வருகின்றன. இதனால், அதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதில் தாமதமாகிறது. இதை தவிர்க்கும் வகையில், தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் முக்கிய கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனுக்கள் வந்து குவிந்த வண்ணம் இருப்பதை நான் பார்க்கிறேன். ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் மூலம் பெற்ற அனைத்து மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், மக்களின் வெகுநாட்களாக தீர்க்காமல் இருக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட அணுகுமுறைகளையும் கண்டு மக்கள் அளவு கடந்த நம்பிக்கையின் அடிப்படையில் இங்கு குவிகின்றனர். ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்பது சிறப்புத் திட்டம்.
போர்க்கால அடிப்படையில் அலுவலர்கள் அந்த மனுக்களை அணுகியதால் அத்தனை மனுக்களுக்கும் விடிவு கிடைத்தது. பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் தேங்கியிருந்த குறைகள் பேரொளி எழுந்ததும் காரிருள் மறைவதைப் போல் களையப்பட்டன. அதேபோல் அனைத்து நேரங்களிலும் நாம் செயல்படுவது சாத்தியமில்லை. ஒருநாளில் 10 ஆயிரம் மனுக்கள் வந்து குவிகின்றன. இந்த மனுக்கள் ஏன் இங்கு குவிகின்றன என்று சிந்திக்க வேண்டும். மாவட்ட அளவிலேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை, வட்ட அளவிலேயே முடிக்கப்பட வேண்டிய பணிகளை, நகர அளவிலேயே களையப்பட வேண்டிய குறைகளை, சிற்றூர் அளவிலேயே செய்து முடிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை உரிய காலத்தில் செய்யாமல் இருப்பதால்
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு அவர்கள் குக்கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி புறப்பட்டு வருகிறார்கள். கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், அவர்கள் காத்துக் கிடப்பதைப் பார்க்கும் போது மனம் கணக்கிறது.
’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்திலும் மனுக்களின் மீது நடவடிக்கையை முடுக்கி விட்டவர்கள் நீங்கள் தான். கோட்டையிலிருந்து கூறியதும் பிறப்பித்த ஆணையை குக்கிராம அளவிலேயே ஏன் முடிக்காமல் விட்டோம் என்பது ஆய்வுக்குட்பட்ட செயல்.
மூன்று மாதங்களாக பட்டா மாற்றம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எனக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை தொடர்புடைய மாவட்டத்திற்கு ஆட்சியரை அழைத்து அனுப்பியதும் படபடவென நடந்தது பட்டா மாற்றம். பட்டா பெற்றவர் படித்து பட்டம் பெற்றபோது கூட அவ்வளவு மகிழ்ந்திருக்க மாட்டார்.
மாவட்ட நிர்வாகம் மக்களுடைய பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே துரிதமாகத் தீர்ப்பதற்கு முனைய வேண்டும். முனைப்பாக கனிவோடும், பணிவோடும் செயல்பட்டால் அவர்கள் தலைமைச் செயலகத்தின் கதவுகளைத் தட்ட வேண்டிய தேவை எழாது.
இதை மனதில் வைத்துக் கொண்டு அனைத்து அலுவலர்களுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்துவதோடு, தலைமை செயலாளருடைய கடிதத்தை படிக்கிற அதே ஆர்வத்துடன் தத்தளிக்கின்ற அபலையின் மனுவையும் படிப்பதில் நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
இலக்குகளை அடைவது மட்டுமல்ல. மக்கள் இதயங்களைக் குளிர்விப்பதும் அரசுப் பணியின் ஓர் அம்சமே.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.