சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று திமுக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, நெல்லை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
திமுக அறிக்கை:
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்துள்ளார். அதன்படி,கட்டணத் தொகை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ரூ.10,000 எனவும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு ரூ.5000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்களை திமுக மாவட்டச் செயலாளரிடமோ அல்லது அண்ணா அறிவாலயத்திலோ ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அறிக்கை:
அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்ட கழக அலுவலகங்களில் உரிய கட்டண தொகையை செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
உள்ளாட்சி பதவிகளுக்கான கட்டணம் , மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினருக்கு ரூ.5,000, ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினருக்கு ரூ.3,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கனவே விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள் அதற்கான அசல் ரசீது மற்றும் நகலினை, சம்பந்தப்பட்ட மாவட்ட கழக அலுவலகங்களில் சமர்ப்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.