சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறப்பது மற்றும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அடுத்தக்கட்டமாக பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், அது தொடர்பான அறிக்கையை முதலமைச்சரிடம் இன்று அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், கொரோனா கட்டுக்குள் வந்ததால், தற்போது படிப்படியாக பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது.

செப்டம்பர் 1ந்தேதி முதல் தமிழ்நாட்டில்,  9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்து வருகின்றன. இதில் 50 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி, சுழற்சி முறையிலான வகுப்புகள், தனிமனித இடைவெளி, வெப்பப் பரிசோதனை என பல்வேறு சுகாதார கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்டமாக 6ம் வகுப்பு  முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கலாம், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளை எப்போது தொடங்கலாம் என்பதும் குறித்தும்  அறிக்கையை கல்வித்துறை அதிகாரிகள்  இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகின்றனர். அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று தொடக்க கல்வி, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகளைத் திறப்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை முதலில் பள்ளிகளை திறக்கலாமா? அல்லது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாமா என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்து குறிப்பிடத்தக்கது.