நாளை தூர்வாஷ்டமி (14.9.2021 – செவ்வாய்க்கிழமை)
ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும். தூர்வை என்பது அறுகம்புல். திருமகள் வாசம் செய்வது. ‘‘ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க” என வாழ்த்துவார்கள். அறுகம் புல்லை பூஜை செய்ய, தடைகள் விலகி, வாழ்வில் சந்தோஷம் பெருகும் என்கிறது சாஸ்திரம்.விநாயகருக்கு அருகு மிகவும் விருப்பமானது.
“அருகு சார்த்தி வழிபடப் பெருகும் நன்மை வாழ்விலே” என்பது போல்,  அறுகம்புல் பறித்து வந்து பூஜை செய்கிறோம்.   துளசி பூஜை போல இதுவும்  சிறப்பானது.
அறுகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர, அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால் கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், இப்பூஜை செய்தல், வறண்ட நிலத்தில் ஈரம் சேர்ந்து புல் தழைத்தது போல வாழ்வும் தழைக்கும்.அந்த நம்பிக்கை வேண்டும் என்றுதான் நம் முன்னோர்கள் அறுகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்தினார்கள்.
தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் எனப் பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அறுகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள்.ஜ்வாலாசுரன் என்று ஒரு அசுரன். அவன் தேவர்களை இம்சித்து வந்தான். அவனிடம் வித்தியாசமான ஆற்றல் இருந்தது. அவனது உடல் நெருப்பு போலக் கொதிக்கும். அவனுக்கு அருகில் கூட யாரும் செல்ல முடியவில்லை. சென்றால் சாம்பலாகி விடுவார்கள். தேவர்கள் பிள்ளையாரை வேண்டினர். கணபதி ஜ்வாலாசுரனைப் பிடித்து விழுங்கி விட்டார். அனல் வடிவம் என்பதால் கணபதியின் வயிறு எரிந்து கொண்டிருந்தது. தேவர்கள் பல முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
சப்த ரிஷிகள் எனப்படும் அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காசியபர், ஆங்கிரஸர் ஆகிய எழுவரும் இருபத்தொரு அறுகம்புற்களைக் கொண்டு வந்து கணபதியின் தலையில் வைத்தனர். இதனால் கணபதியின் உடல் குளிர்ந்து. அனல் தணிந்தது. இதனால் விநாயகர் மகிழ்ந்தார். அதுமுதல் தனக்கான பூஜைப்பொருள் அறுகம்புல்லே என்று மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார்.
அப்படிப்பட்ட அறுகம்புல்லை, நீராடிப் பறித்து வந்து ஒரு தாம்பாளத்தில் வைத்து, அதன்மேல் விநாயகர் படமோ சிலையோ வைத்து, மஞ்சள், குங்குமம் சாற்றி, தூப தீபம் காட்டி பூஜை செய்ய வேண்டும். இவ்விரதம் பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் அற்புத விரதமாகும். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் சகல நன்மைகளும் ஏற்படும். விநாயகர் அகவல் பாராயணம் செய்யலாம்.