சென்னை: சட்டப்பேரவையில்  நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் வகையிலான முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என கூறிய எதிர்க்கட்சித்தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாணவன் தனுஷ் தற்கொலைக்கு திமுகஅரசே காரணம் என்றும் கூறினார்.

தமிழக சட்டபேரவையில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, நீட் தேர்வுக்கு  அனிதா முதல் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அந்த காலக்கட்டத்தில், மரண அமைதியில் இருந்தது அதிமுக ஆட்சிதான். நீட் தேர்வை எதிர்ப்பதற்கான தெம்பும், திராணியும் அதிமுக அரசுக்கு இல்லை. ஜெயலலிதா இருக்கும் போது கூட நீட் தேர்வு வரவில்லை என்று கூறியதுடன், எதிர்கட்சி தலைவர் முதல்வராக இருந்த போது தான் நீட் தேர்வு நடந்தது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு மத்திய அரசிடம் ஆதரவு கேட்ட போது, நீட் தேர்வுக்கு அதிமுக விலக்கு கேட்கவில்லை எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியில்தான் நீட் தற்கொலைகள் நிகழ்ந்தன. மாணவர் தனுஷின் தற்கொலைக்கும் அதிமுகதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  முதல்வர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.  சேலத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துக்கொண்டதற்கு திமுக அரசுதான் காரணம் என்று எடப்பாடி பதில் கூறியதுடன், நீட் தேர்வை  ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவிட்டீர்கள் என்று ஸ்டாலின்மீது குற்றம் சாட்டினார். இதையடுத்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. அதையடுத்து, பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, , ”சட்டப்பேரவை தொடங்கியவுடன் அவசர நிகழ்வுகள் குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு வந்தேன். வாசிம் அக்ரம் என்பவர் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வாணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரின் குடும்பத்துக்கு தேவையான நிதியுதவியையும் வேலைவாய்ப்பையும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது, ஆனால், அவர்களால் முடியவில்லை. நேற்று நீட் தேர்வு நடைபெற்றுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துக்கொண்டதற்கு திமுக அரசுதான் காரணம் என்று கூறியவர்,  ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என  குற்றசாட்டினார்.

இதுகுறித்து ஆளுநர் உரையின்போது கூட கேட்டேன். நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என்று. ஆனால் அதற்கு முதல்வர் மழுப்பலான பதிலை தெரிவித்தார். இதனால் இன்று ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு பிரச்னையில் அரசு தெளிவான முடிவை திமுக அரசு சொல்லவில்லை. மாணவர்கள் நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள முடியவில்லை.

மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுகவே காரணம். நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை அதிமுக ஆதரிக்கும்.

இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு மட்டும்தான் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகிறது. நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறியபோது அப்போதைய எம்பி ராசா நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பே இல்லை என கேள்வி எழுப்பினார். இப்போது அவர்களுக்கு இது பொருந்துமா என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.