ஈரோடு: 
கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் பரிசு வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் விஜயகுமார் அறிவித்துள்ளார்.
நமது நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. முதலில் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
தொடக்கக் காலத்தில் தடுப்பூசி போடத் தயக்கம் காட்டிய மக்கள், தற்போது ஓரளவு ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அதே வேளையில் தடுப்பூசி போட ஆர்வம் காட்டாத மக்களைத் தடுப்பூசி போட வைக்க நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு பரிசுகள், பிரியாணி போன்ற இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் பரிசு வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் விஜயகுமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பவானி வட்டாட்சியர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஈரோடு மாவட்டம் பவானியில் நாளை கொரோனா தடுப்பூசி கொள்பவர்களைக்  குலுக்கல் முறையில் தேர்ந்து எடுத்து, தேர்வு செய்யப்படுபவர்களுக்குத் தங்க நாணயம், வெள்ளி விளக்கு, வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.