டெல்லி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்கும் என அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அதை கண்டுகொள்ளாமல், கடந்த அதிமுக ஆட்சியில் விசாரணை முடிவடைந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், திமுக ஆட்சி பதவி ஏற்றதும், கொடநாடு விசாரணையை மீண்டும் கையில் எடுத்தது. அதன்படி, ழக்கில் தொடர்புடைய சயான், மனோஜ், மர்மமான முறையில் மரணம் அடைந்த டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முன்னாள் முதல்வர் எடப்பாடியின் பெயரும் வெளியானது. இது அதிமுகவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியாக இருக்கும் அதிமுக பிரமுகர் அனுபவ்ரவி என்பவர் கொடநாடு வழக்கு மறுவிசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், நீதிமன்றம் மறுவிசாரணைக்கு பச்சைக்கொடி காட்டி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச்சில் விசாரிக்கப்பட்டது. அப்போது, மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவில் எந்த ஒரு முகாந்திரமுமே இல்லை. கோடநாடு வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இந்த வழக்கில் இப்போதைய நிலையில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.