சென்னை
ஆலயங்களில் முடிக் காணிக்கைக்குக் கட்டணம் இல்லை என அறிவிப்புப் பலகை வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பல பெரிய கோவில்களில் பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்துவது வழக்கமாகும். இவ்வாறு முடி காணிக்கை செலுத்துவோர் கட்டணம் செலுத்தும் பழக்கம் உள்ளது. இதனால் பக்தர்கள் துயருறுவதால் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்தக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடிக் காணிக்கை கட்டணம் வசூலிக்கப்படாது மேலும்.அதற்கான கட்டணத்தை அந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் கோயில் நிர்வாகமே செலுத்தும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதையொட்டி செப்டம்பர் 5-ம் தேதி (நேற்று) முதல் கோயிலுக்குப் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடிக்காணிக்கைக்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
தவிர முடிக் காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்ற விவரத்தைப் பொதுமக்கள், சேவார்த்திகள் அறியும்வண்ணம் கோயில் வளாகம், முடிக்காணிக்கை செலுத்தும் இடம் மற்றும் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.