ஆடு முக்கிய வேடத்தில் நடித்த “ ஆட்டு கார அலமேலு, மாடு நடித்த “ கோமாதா என் குல மாதா “ யானை நடித்த நல்ல நேரம், அன்னை ஒரு ஆலயம், கும்கி, பாம்பு நடித்த நீயா, வெள்ளிக்கிழமை விரதம், நாகம், ஈ முக்கியமாக நடித்த நான் ஈ, கோழி நடித்த ஆடுகளம், கழுதை பங்கேற்ற பஞ்ச கல்யாணி, நாய் நடித்த நாய்கள் ஜாக்கிரதை, குதிரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற அழகர் சாமியின் குதிரை…
“போதும், போதும்.. மேட்டருக்கு வா” என்கிறீர்களா?
இதோ, வந்தாச்சு.
முந்தைய விலங்கின படங்கள் வரிசையில் இன்னுமொரு படம் சேரப்போகிறது. அது “ஜெட்லி”
இதில் புதுமை என்னவென்றால், இதுவரை தமிழ்ப்படங்களில் தலைகாட்டாத, விலங்கு நடிக்கப்போகிறது. அது – குட்டி வெள்ளை பன்றி!
படத்தின் இயக்குநர் ஜென் சாய். கதாநாயகிகளாக என்னை அறிந்தால், உத்தமவில்லன் படங்களில் நடித்த பார்வதி நாயர், விஜய் ஆண்டனி நடிக்கும் சைத்தான் படத்தில் நடிக்கும் அருந்ததி நாயர் இருவரும் நடிக்கிறார்கள்.
“இந்த நவீன யுகத்திலும் மக்களிடையே அறியாமை தலை விரித்தாடுகிறது. அபசகுனம், சுபசகுனம் என்று சகுனங்களின் மேல் அதிக நம்பிக்கை வைத்துத் தான் மக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை காசாக்க நினைக்கும் இருவரின் நகைச்சுவை கலாட்டா தான் “ ஜெட்லீ” என்று இயக்குநர் ஜெகன் சாய் சொல்ல… “இருக்கட்டும் சார்” என்று, ஹீரோயின் பார்வதி நாயரிடம் பேச்சுகொடுத்தோம்.
அவர், “ஹாலிவுட் கலைஞர்கள் இந்தப் படத்தில் பணிபுரிகிறார்கள். நார்னியா, லயன் போன்ற படங்களின் மாடல் அனிமேட்டர் இதில் பணிபுரிகிறார்.
மிக உயரிய தொழில்நுட்பத்துடன் ஜெட்லீ உருவாகிறது” என்று விளம்பர மாடல் போல் படபடத்தார்.
வாழ்த்து சொல்லி கிளம்பினோம்.