சென்னை: பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், இதுதொடர்பான சட்ட திருத்த மசோதா விரைவில் கொண்டு வரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று அறநிலையத்துறை, சுற்றுலா, தொழிலாளர் நலத்துறை, கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக சட்டப்பேரவை விதி எண் 100ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில்துறை சார்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி,
இந்திய தொழில்துறை வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாடு தொழில்துறை வகிக்கிறது. தமிழகத்தில் உள்ள 1570 நூற்பாலைகள் மூலம் நூற்கப்படும் நூல் நாட்டின் மொத்த உற்பத்தி திறனில் 45 சதவீதம். தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளுக்கு தேவையான 95% பஞ்சு வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண் பொருட்கள் விற்பனைச் சட்டம் 1987 பிரிவு 24இன் படி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு விற்பனை வரி மீது சந்தை நுழைவு வரியாக ஒரு விழுக்காடு விதிக்கப்படுகிறது. மேற்படி பஞ்சு மற்றும் நூல் ஆகியவை வேளாண் பொருட்களாக கருதப்பட்டு தமிழகத்தில் ஒரு சதவீதம் சந்தை நுழைவு வரியாக விதிக்கப்படுகிறது.
சந்தை நுழைவு வரி என்பது பருத்தி கொள்முதலில் மட்டுமே விதிக்கப்பட வேண்டும் . மாறாக பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகிய உற்பத்தி பொருட்கள் மீது விதிக்கப்படுகிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் போது சிறு குறு நூற்பாலைகள் தொழில் நிறுவனங்கள் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது.
பஞ்சின் மீதான ஒரு சதவீதம் சந்தை நுழைவு வரி நீக்க வேண்டும் என்பது தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்த சந்தை வரியை நீக்க வேண்டுமென நெசவாளர்கள் கோரிக்கை வைத்தனர். தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீதான ஒரு சதவீதம் சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.