சென்னை: 
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் தமிழ்நாடு அரசு கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. தங்களை எதிர் மனுதாரராகச் சேர்க்கக் கோரி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் 2011 முதல் 2013-ம் ஆண்டு வரை ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமானத்திற்கு அதிகமாக ராஜேந்திர பாலாஜி, 7 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மார்ச் மாதம் இருவேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டது. இந்த மாறுபட்ட தீர்ப்பால், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் கடந்த ஜூன் மாத இறுதியில், நியமிக்கப்பட்டார்.
ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா என்பதைக் கண்டறிய நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில், வருமானத்துக்கு மேல் 73 விழுக்காடு அளவுக்கு ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தொடக்க நிலை விசாரணையை வைத்து வழக்கைக் கைவிட முடிவெடுக்க முடியாது என்றும், தற்போது மேல் விசாரணை தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். எழுத்துப்பூர்வமான வாதத்தைத் தாக்கல் செய்ய ராஜேந்திர பாலாஜி சார்பில் அவகாசம் கோரியதை ஏற்றநீதிபதி நிர்மல்குமார், விசாரணையைச் செப்டம்பர் 8ஆம் நாளுக்குத் தள்ளிவைத்தார்.