சென்னை: தமிழகத்தில் 75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த செப்டம்பர் 30 முதல் தடை விதிக்கப்படுவதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது,  கடந்த  2019ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாக்டிக் தடை அமலில் உள்ளது. அதன்படி,  ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்தாலோ, தயாரித்தாலோ ரூ.100 முதல் ரூ.1லடசம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த தடையானது கொரோனா காலங்களில் செயல்படுத்தப்படாமல் இருந்தது. கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், பிளாஸ்டிக் தடை மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டியது. இதனால், மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளின் நடமாட்டம்  அதிகரித்தது.

இதையடுத்து, சென்னையில், அதிகாரிகள் பிளாஸ்டிக் தடையை  மீண்டும் அமல்படுத்தத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளுக்கும் வணிகர்களுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது.

இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பிளாஸ்டிக் தடையை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்து உள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் செப்டம்பர் 30 முதல் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும், 2023ஆம் ஆண்டு முதல் 120 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 51 மைக்ரான் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 75 மைக்ரானாக உயர்த்தப்பட்டுள்ளது.