ஶ்ரீ காளஹஸ்தி கோவில்
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள காளஹஸ்தி நகரத்தில் உள்ளது. தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான சிவன் கோவில்.
இந்த இடத்தில் தான் கண்ணப்ப நாயனார் தன் கண்களை எடுத்து சிவனுக்குக் கொடுக்க முனைந்த இடமாகப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் இருந்து 36 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஶ்ரீகாளஹஸ்தி கோவில். இந்த கோவிலில் பஞ்சபூத ஸ்தலங்களுள் வாயுலிங்கத்திற்கு மிகவும் புகழ் பெற்ற தலமாக உள்ளது.
இந்த கோவிலுக்கு வேறு சில முக்கியத்துவமும் உண்டு. இதனை ராகு கேது ஸ்தலம் என்றும் தக்ஷிண கைலாசம் என்றும் அழைக்கிறார்கள். இந்த கோவிலின் உட்புறம் ஐந்தாம் நூற்றாண்டிலும் வெளிப்புற கட்டமைப்பு 11 ஆம் நூற்றாண்டிலும் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இங்குச் சிவன் வாயு ரூபத்தில் காளஹஸ்தீஸ்வரா என்ற பெயரில் வழிபடப்படுகிறார்.
வாயு தேவர் இங்கே சிவபெருமானைக் கற்பூர லிங்கமாக வழிபட்டுள்ளார் அவர் தவத்தில் மெச்சிய சிவபெருமான் வாயுவிற்கு அருளி இங்கே தரிசனம் தந்ததாகவும் அவர் கோரிய வரத்தின் பேரிலேயே இங்கே அவர் வாயுலிங்கமாகத் தங்கி தரிசனம் தருகிறார்.
இங்கே நூறு தூண் மண்டபம் விஜயநகர பேரரசரான கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. இதன் மூலவர் சிவலிங்கம் வெள்ளை நிற கல்லால் ஆனது. இது பார்க்க யானையின் தந்தம் போன்ற வடிவில் இருந்தது. இந்த கோவிலைத் தென்னகத்தின் காசி என்றழைக்கிறார்கள்.
இந்த ஒரு கோவில் தான் சூரிய கிரகணம், மற்றும் சந்திர கிரகணம் ஆகிய நாட்களில் திறந்திருக்கும் அதிசயம் நிகழ்கிறது. ஜோதிட பரிகார ஸ்தலங்களுள் மிக முக்கியமானது இந்த கோவில். இந்து புராணங்களில் படி, காளஹஸ்தீஸ்வரரை பிரம்ம தேவர் நான்கு யுகத்திலும் வணங்கியுள்ளார். மஹாபாரதத்தின் அர்ஜூனரும் இங்கே சிவபெருமானை வழிபட்ட குறிப்புகள் உண்டு.
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், நக்கீரர், ஆகிய அனைவரும் இந்த கோவில் குறித்துப் பாடல் பாடியுள்ளனர். இங்கே நடைபெறும் சிவராத்திரி விழா 13 நாட்கள் நடக்கும் திருவிழா. இந்த நாட்களில் சிவபெருமானைத் தரிசிக்க இங்கே இலட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர்.